தெஹ்ரான்: மத்திய கிழக்குப் பகுதியில் மிகவும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையே இப்போது திடீரென ஹிஸ்புல்லா தீவிரவாத குழுவினர் இஸ்ரேல் மீது தாக்குதலை ஆரம்பித்துள்ளனர். இதனால் எங்கு அப்பகுதியில் முழு வீச்சிலான போர் தொடங்குமோ என்ற அச்சம் அதிகரித்துள்ளது. உலக நாடுகள் இப்போது அங்கு நிலவும் சூழலைக் கூர்ந்து கவனித்து வருகின்றன.
மத்திய கிழக்குப் பகுதியில் பதற்றமான ஒரு சூழலே நிலவி வருகிறது. அங்கு ஒரு பக்கம் இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் தொடரும் நிலையில், இப்போது இஸ்ரேல் ஹிஸ்புல்லா அமைப்பிற்கு இடையேயும் பதற்றமான ஒரு சூழலே நிவி வருகிறது.
இதற்கிடையே லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா ஆயுதக்குழு இப்போது வடக்கு இஸ்ரேல் மீது திடீர் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திடீர் தாக்குதல்: வடக்கு இஸ்ரேலில் ஏக்கர் என்ற பகுதிக்கு அருகே அமைந்துள்ள இரண்டு ராணுவ தளங்களைக் குறிவைத்து ஹிஸ்புல்லா அமைப்பினர் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதேபோல மற்றொரு இடத்தில் இஸ்ரேல் ராணுவ வாகனத்தைக் குறிவைத்து அவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவமும் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளது. அதாவது லெபனானில் இருந்து பல டிரோன்கள் இஸ்ரேலை நோக்கி வருவது அடையாளம் காணப்பட்டதாகவும், அவற்றில் சிலவற்றை இஸ்ரேல் ராணுவம் இடைமறித்து அழித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், அதையும் தாண்டி, ஹிஸ்புல்லா அமைப்பினர் நடத்திய இந்தத் தாக்குதலில் இஸ்ரேல் கடலோர நகரமான நஹாரியாவின் பொதுமக்கள் பலர் காயமடைந்ததாகக் கூறப்பட்டுள்ளது. அங்குள்ள பேருந்து நிலையம் அருகே டிரோன் தாக்கிய நிலையில், பொதுமக்கள் பலரும் அதில் காயமடைந்துள்ளனர்.
அச்சம்: ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி ஃபுவாட் ஷுக்ர் ஈரான் சென்றிருந்த போது அவரை இஸ்ரேல் கொன்றது. இதற்கு நிச்சயம் பழிவாங்குவோம் என்று ஹிஸ்புல்லா அமைப்பு எச்சரித்துள்ள நிலையில், இந்தத் தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் எங்கு மத்திய கிழக்கு நாடுகளில் முழு வீச்சிலான போர் தொடங்குமோ என்ற அச்சமும் அதிகரித்து வருகிறது.
தளபதி ஃபுவாட் ஷுக்ரின் படுகொலைக்கான பதிலடியாக ஹிஸ்புல்லா அமைப்பு இப்போது இஸ்ரேல் மீது இந்தத் தாக்குதலை நடத்தியதாக முதலில் கூறப்பட்டது. இருப்பினும், இது பதிலடி தாக்குதல் இல்லை. அதை நாங்கள் இன்னும் ஆரம்பிக்கவில்லை என்று ஹிஸ்புல்லா கூறியுள்ளது அப்பகுதியில் பதற்றத்தை அதிகரித்தே இருக்கிறது.
என்ன காரணம்: முன்னதாக இன்று, எல்லைக்கு வடக்கே சுமார் 30 கிமீ தொலைவில் உள்ள லெபனான் நகரமான மேஃபடூனில் உள்ள ஒரு வீட்டில் திடீர் ஏவுகணை தாக்குதல் நடந்தது. இதில் ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்த 4 பேர் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதை இஸ்ரேல் நடத்தி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. எனவே, அதற்குப் பதிலடியாக இப்போது ஹிஸ்புல்லா இந்த ஏவுகணை தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மத்திய கிழக்குப் பகுதியில் மிகவும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஒரு பக்கம் இஸ்ரேல்- ஹமாஸ் இடையேயான போர் பல மாதங்களாகத் தொடர்ந்து வருகிறது. ஹமாஸை முழுமையாக அழிக்கும் வரை ஓய மாட்டோம் எனச் சூளுரை எடுத்துள்ள இஸ்ரேல், காசா பகுதியில் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. காசா மீதான தாக்குதலை எதிர்த்தே ஹிஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேல் மீது தாக்குதலைத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.