top of page
Group 39.png

டெலிகிராம் CEO கைது - பிரான்ஸ் நாட்டுடனான ரஃபேல் ஒப்பந்தத்தை முறித்தது ஐக்கிய அரபு அமீரகம்?

Author Logo.png

AM Sajith

29/8/24

டெலிகிராம் செயலியின் நிறுவனர் பவெல் துரோவ் கைது நடவடிக்கை  ரஷ்யா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உடனான பிரான்ஸின் உறவை நெருக்கடிக்கு  உள்ளாக்கி உள்ளது. பிரான்சின் Dassault நிறுவனத்திடம் இருந்து 80 ரஃபேல்  விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தை ஐக்கிய அரபு அமீரகம் கைவிடப் போவதாகவும்  தகவல்கள் வெளியாகியுள்ளன.


டெலிகிராம் செயலியின் இணை  நிறுவனரும், CEO-வுமான பவெல் துரோவ் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கடந்த 24ஆம்  தேதி கைது செய்யப்பட்டது, சர்வதேச அளவில் பேசு பொருளாகி உள்ளது.  தொழில்நுட்ப துறை சார்ந்து இயங்குபவர்களின் கருத்து சுதந்திரத்தை பறிப்பது  போல் துரோவின் கைது நடவடிக்கை இருப்பதாக எலான் மஸ்க் உள்ளிட்டோரும் சமூக  வலைதளங்களில் கருத்து தெரிவித்திருந்தனர்.


துபாய் நகரை தலைமையகமாக கொண்டு செயல்படும் டெலிகிராம் மெசஞ்சர் செயலியை  உலகம் முழுவதும் சுமார் 100 கோடி பேர் பயன்படுத்துவ்கின்றனர். தனி நபர்கள்  தகவல் பரிமாற்றத்திற்கு மட்டுமின்றி, டெலிகிராமில் குழுக்களை தொடங்கி,  அதில் 2 லட்சம் பயனாளர்கள் வரை ஒரே நொடியில் தகவல்களை பரிமாற முடியும்  என்பது டெலிகிராம் செயலியின் சிறப்பம்சங்களில் ஒன்று. பிரான்ஸ் நாட்டின்  அதிபர் மாளிகையில் பணியாற்றும் அதிகாரிகள் கூட டெலிகிராம் செயலியை  பயன்படுத்தி வருகின்றனர். அதே நேரம் டெலிகிராம் செயலியை தீவிரவாதிகள்,  குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களும் பயன்படுத்துவதாக பிரான்ஸ் புலனாய்வு  பிரிவு கண்டறிந்தது.


இந்த சூழலில் தான் டெலிகிராம் பயனாளர்களின் தரவுகளை அரசிடம் இருந்து  மறைத்து பாதுகாத்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கடந்த 24ஆம்  தேதி பாவெல் துரோவை பிரான்ஸ் அரசு கைது செய்தது. ஆனால், பாவெல் துரோவின்  கைது நடவடிக்கை கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது எனக் கூறி, பிரான்ஸ்  அரசுக்கு எதிராக போராட்டங்களும் நடந்து வருகின்றன.


இந்நிலையில் பவெல் துரோவின் கைது அரசியல் ரீதியிலானது அல்ல என்று  பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்  வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், கருத்து மற்றும் பேச்சு சுதந்திரத்தை  ஊக்குவிப்பதில் பிரான்ஸ் அரசு உறுதியாக உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.  ஆனால் நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் வகையில்,  சட்டத்திற்கு உட்பட்டே பேச்சு சுதந்திரம் வழங்கப்படும் என்றும் மேக்ரன்  தெளிவுபடுத்தி உள்ளார்.


இதனிடையே, பவெல் துரோவ் கைது நடவடிக்கைக்கு  கண்டனம் தெரிவிக்கும் விதமாக, பிரான்ஸின் Dassault நிறுவனத்திடம் இருந்து  80 ரஃபேல் விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தை ஐக்கிய அரபு அமீரகம் நிறுத்தி  வைத்துள்ளது. இதுமட்டுமின்றி, பிரான்ஸ் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம்  இடையிலான ராணுவ ரீதியிலான ஒத்துழைப்பு நடவடிக்கைகளும், பாதிக்கப்படலாம் என  தகவல்கள் வெளியாகி உள்ளன.


இது ஒருபுறம் என்றால், பவெல் துரோவ் கைது நடவடிக்கையால், ரஷ்யா - பிரான்ஸ்  இடையிலான இருதரப்பு உறவு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சரிவு கண்டுள்ளது.  ரஷ்ய குடியுரிமை பெற்ற துரோவிற்கு தேவையான சட்ட ரீதியான உதவிகளை செய்ய  ரஷ்ய அரசு தயாராக இருப்பதாகவும், ஆனால், அவர் பிரான்ஸ் குடியுரிமையும்  பெற்றிருப்பதால், உதவி வழங்குவதில் சில சிக்கல்கள் நிலவுவதாகவும், ரஷ்ய  அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.  ரஷ்யாவை சேர்ந்த தொழில்நுட்ப ஜாம்பவான் பவெல் துரோவ், ஐக்கிய அரசு அமீரகம்  மற்றும் பிரான்ஸ் நாட்டிலும் குடியுரிமை பெற்றுள்ளார்.



bottom of page