ரஷியாவின் கிழக்கு கம்சட்கா தீபகற்பத்தில் உள்ள சிவெலுச்சு எரிமலை இன்று வெடித்து, சுமார் 5 கிலோமீட்டர் (3 மைல்) உயரம் வரை சாம்பலை வெளிப்படுத்தியது. இந்த வெடிப்புக்கு முன்னதாக, அந்த பகுதியின் கடற்கரை அருகில் 7.0 ரிக்டர் அளவில் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரஷ்ய அறிவியல் அகாடமி எரிமலைவியல் மற்றும் நிலநடுக்கவியல் நிறுவனம் தெரிவித்தது, நிலநடுக்கத்திற்கு பிறகு சிவெலுச்சு எரிமலை வெடித்து, அதை தொடர்ந்து இன்னும் பலத்த நிலநடுக்கம் வரக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அவர்கள் வெளியிட்ட காணொளியில், சாம்பல் மேகம் 490 கிலோமீட்டர் (304 மைல்) வரை பரவியது காட்டப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், குரில் தீவுகளில் உள்ள எபெகோ எரிமலைவும் சுமார் 2.5 கிலோமீட்டர் (1.5 மைல்) உயரம் வரை சாம்பலை வெளியேற்றியது. நிலநடுக்கம் இதற்கு காரணமா என்பது குறித்து உறுதியாக தகவல் இல்லை.
இந்த வெடிப்புகளால், விமானங்களுக்கு சில நேரத்திற்கு 'கோட் ரெட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், அந்த பகுதியின் விமானங்கள் மிகவும் எச்சரிக்கையாக செயல்பட்டன. அதே சமயம், விமான போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்படவில்லை என்றும், எந்த சேதமும் ஏற்படவில்லை என்றும் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.