பிரித்தானியாவில் (UK) புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராக தீவிர வலதுசாரி அமைப்பினர் கலவரத்தில் ஈடுபடுவதைக் கட்டுப்படுத்துவதற்காக முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பிரித்தானியாவின் பல நகரங்களில் புலம்பெயர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வலதுசாரிகள் கடந்த வாரம் நடத்திய போராட்டம் கலவரமாக மாறியது. இதையடுத்து, வன்முறைகளில் ஈடுபட்ட 400க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கலவரங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) இரண்டாவது முறையாக அமைச்சர்கள் உட்பட மூத்த காவல்துறை அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தி, நிலைமையை ஆராய்ந்துள்ளார்.
வலதுசாரி அமைப்பினர் புதிய ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், மீண்டும் கலவரம் ஏற்படுவதைத் தடுப்பதற்காக ஆயிரக்கணக்கான காவல்துறையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், புலம்பெயர்தலுக்கு ஆதரவான வழக்கறிஞர்கள் மற்றும் அவர்களின் குடியிருப்புகளுக்குபாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.