top of page
Group 39.png

கேப்பாபிலவு மக்களின் காணிகளை விடுவிக்க நடவடிக்கை கோரி ஜனாதிபதிக்கு ரவிகரன் எம்.பி வலியுறுத்தல்

Author Logo.png

Mohamed Nizam Farzath

15/1/26

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபிலவு பகுதியில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள மக்களின் காணிகளை மீள ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


இதற்காக கடந்த ஜனவரி 14 ஆம் திகதி ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், கேப்பாபிலவு மக்களின் பூர்வீக காணிகள் இன்னும் முழுமையாக விடுவிக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.


இந்தக் கடிதத்தைத் தொடர்ந்து, கேப்பாபிலவு பகுதியில் காணி விடுவிப்பு தொடர்பான உண்மை நிலை குறித்து விரிவான அறிக்கையை உடனடியாக சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி செயலகம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளது.


முன்னதாக பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கேப்பாபிலவு மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டதாகவும், மாற்று காணிகளும் வீடுகளும் வழங்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். எனினும், அந்த தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் எதிர்ப்பு வெளியிட்டிருந்தார்.


அவரது விளக்கத்தின்படி, 59 குடும்பங்களுக்கு சொந்தமான மொத்தம் 159.5 ஏக்கர் காணிகள் இன்னும் இராணுவ கட்டுப்பாட்டிலேயே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில், முல்லைத்தீவு மாவட்டச் செயலாளரிடமிருந்து பெறப்பட்ட அதிகாரபூர்வ தரவுகளும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.


மேலும், பதினாறு ஆண்டுகளுக்கும் மேலாக தங்களது சொந்த நிலங்களுக்கு மீளத் திரும்ப காத்திருக்கும் கேப்பாபிலவு மக்களுக்கு நீதி வழங்கும் வகையில், காணி விடுவிப்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறும் ரவிகரன் தனது கடிதங்களில் வலியுறுத்தியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினரிடம் இருந்து விரிவான அறிக்கையைப் பெற்று உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி செயலகம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

bottom of page