பாகிஸ்தானில் 56 சதவீதம் மக்கள் தங்களுடைய முழு வருமானத்தையும் செலவு செய்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் தங்களின் வருங்காலத்திற்காக சேமித்து வைக்க இயலாத சூழல் உருவாகியுள்ளதாகவும் அங்குள்ள மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானில் கடந்த சில வருடங்களாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பல நாடுகளிடம் இருந்து கடன் வாங்கி பொருளாதார சிக்கலை சமாளிக்கும் நிலை உருவாகியுள்ளது. அங்கு வாழும் மக்களில் 74 சதவீதம் மக்கள் தங்கள் அன்றாட செலவிற்கு கூட வருமானம் ஈட்ட முடியாத சூழல் நிலவி வருகிறது. பல்ஸ் கன்சல்டன்ட் என்ற அமைப்பானது பாகிஸ்தானின் நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களின் பொருளாதார சூழல் குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன் படி, பாகிஸ்தானின் நகர்ப்புற மக்களில் 74 சதவீதம் மக்கள் அன்றாட செலவினங்களுக்கே கஷ்டப்படுவதாக தெரிவித்துள்ளது. கடந்த 2023-ம் ஆண்டில் 60 சதவீதமாக இருந்த நிலை தற்போது 74 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களுள் 40 சதவீத மக்கள் கடன் வாங்கி தங்களுடைய செலவுகளை நடத்துவதாகவும், 10 சதவீத மக்கள் முதன்மையான வேலையுடன் பகுதி நேர வேலைக்கு சென்று தங்களுடைய செலவுகளை கவனித்து கொள்வதாகவும் அறிக்கை கூறுகிறது.
நிதி நெருக்கடியை சமாளிக்க உலக நாடுகளிடம் இருந்து பாகிஸ்தான் கடன் வாங்கி வருவதோடு உலக வங்கி உள்ளிட்ட அமைப்புகளும் பாகிஸ்தானிற்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானில் இதே சூழல் தொடர்ந்தால் மக்கள் வேறு நாடுகளுக்கு செல்லும் நிலை அல்லது நாடு முழுவதும் கலவரம் ஏற்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.