top of page
Group 39.png

இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து அநுர அரசாங்கத்தின் கருத்துகள் தொடர்பில் அவதானம்.

Author Logo.png

A Mohamed Sajith

21/10/24

தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தொடர்பில் சமகால அரசாங்கத்தின் நிலைப்பாடு  மற்றும் அதன் சில உறுப்பினர்கள் வெளியிடும் கருத்துகள் குறித்து  புதுடில்லி மிகுந்த அவதானம் செலுத்தியுள்ளது.


பொதுத் தேர்தல் முடிந்தவுடன், நாடாளுமன்றத்தை ஆரம்பித்து விட்டு, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்தியா செல்லத் திட்டமிட்டுள்ளார்.


அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாகத் தெரிவான பின், முதல்  இராஜதந்திரியாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கடந்த 04ஆம்  திகதி இலங்கைக்கு அதிகாரப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார். அவர் ஜனாதிபதி,  பிரதமர் ஹரிணி அமரசூரிய, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், முன்னாள்  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்  பிரேமதாச உள்ளிட்ட பல்வேறு முக்கிய நபர்களைச் சந்தித்தார்.


இந்த சந்திப்பில், எஸ். ஜெய்சங்கர் இலங்கைக்கு தொடர்ந்து இந்தியா  உதவிகளை வழங்கும் உறுதியைத் தெரிவிப்பதோடு, தமிழ் மக்களுக்கு அரசியல்  தீர்வாகக் கருதப்படும் 13ஆவது திருத்தச்சட்டத்தை செயல்படுத்துவது அவசியம்  என வலியுறுத்தினார்.


அதேநேரத்தில், சில நாட்களுக்கு முன்னர் மக்கன் விடுதலை முன்னணியின்  (ஜே.வி.பி.) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தொலைக்காட்சி  நிகழ்ச்சியொன்றில், "வடக்கு மக்கள் 13ஆவது திருத்தச்சட்டத்தையோ அல்லது  அதிகாரப் பகிர்வையோ கோரவில்லை. அது அரசியல்வாதிகளின் கோரிக்கையே.  இம்மக்களுக்கு தமது பொருளாதார நலன்களை நிறைவேற்ற வேண்டும் என்பதே  முக்கியம்" எனக் கூறினார்.


ரில்வின் சில்வாவின் கருத்துகள் வடக்கு தலைவர்களின் கடும்  எதிர்ப்பைச் சந்தித்துள்ளதுடன், இராஜதந்திர வட்டாரங்களிலும் இதுகுறித்து  கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அநுரகுமார திஸாநாயக்கவின் வெளிவிவகார கொள்கைகள்  குறித்து இராஜதந்திரிகள் ஏற்கனவே கவனமாக இருந்த சூழலில், தமிழ்  மக்களுக்குத் தீர்வு தேவையில்லை எனக் கூறப்படும் கருத்துகள் பரவுகின்றன.


தேசிய மக்கள் சக்தியின் முக்கிய தலைவர்கள் தமிழர்களின்  இனப்பிரச்சினை தொடர்பான கருத்துகளை புதுடில்லி தீவிரமாக கவனித்து  வருகின்றது. இதுகுறித்து மௌனம் காக்கும் இந்தியா, அநுரகுமார திஸாநாயக்க  புதுடில்லிக்குப் பயணம் செய்யும் சந்தர்ப்பத்தில் தமது நிலைப்பாட்டை  தெளிவாக வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வாக 13ஆவது திருத்தம்  தொடர்பில் ஜனாதிபதி நேரடியான கருத்துக்களை வெளியிடுவதற்கான வாய்ப்புகளை  புதுடில்லி ஏற்படுத்தத் தயாராகி வருவதாக இராஜதந்திர வட்டாரங்கள்  தெரிவிக்கின்றன.

bottom of page