பாரிஸ் ஒலிம்பிக் போட்டித் தொடரில் மகளிர் குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற அல்ஜீரியாவின் இமானே கெலிஃப் பாரிஸில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
மகளிருக்கான குத்துச்சண்டை போட்டியில் 66 கிலோ எடைப்பிரிவில் அல்ஜீரியாவின் இமானே கெலிஃப் போட்டியிட்டு தங்கப்பதக்கம் வென்றார். இரண்டாவது சுற்று போட்டியில் இமானே விட்ட குத்தில் இத்தாலிய வீராங்கனை ஏஞ்சலினா கரினி மூக்கில் ரத்தம் சொட்டி 46 நொடிகளில் போட்டி முடிந்தது.
இதன்பிறகு அல்ஜீரிய வீராங்கனையின் பாலினம் குறித்து சர்ச்சை பரவலாக இருந்தது.இந்த சூழலில் தனது பாலினம் குறித்து இணையத்தில் அவதூறு கருத்துகள் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை கோரி கெலிஃப் தரப்பில் பாரிஸில் புகார் அளிக்கப்பட்டது.
இமானே கெலிஃப்பின் பாலினம் குறித்து சர்ச்சை கருத்துகளை பதிவிட்டவர்கள் மீது பிரான்ஸ் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டால் 2 முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும். மேலும் அபராதமாக 30 முதல் 45 ஆயிரம் யூரோக்கள் வசூலிக்கவும் பிரான்சில் சட்ட விதிகள் உள்ளன.
கடந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற சர்வதேச குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் தொடரின்போது, பாலின பரிசோதனையில் தோல்வியடைந்ததால் வீராங்கனை இமானே கேலிஃப் போட்டியில் விளையாடும் தகுதியை இழந்தார். மேலும் தற்போது நடைபெற்று வரும் ஒலிம்பிக் தொடரில் இத்தாலிய வீராங்கனையை வெறும் 46 நொடிகளில் அவர் வீழ்த்தியதால் அவரது பாலினம் குறித்த சர்ச்சை பரபரப்பாக பேசப்பட்டது.
ஆகஸ்ட் 1 ஆம் தேதி இந்த போட்டி நடந்தது. அப்போது கேலிஃபை எதிர்த்து போட்டியிட்ட இத்தாலியின் ஏஞ்சலா கரினி, கேலிஃப் ஆண் தன்மை கொண்டவர் என்றும், அவரை எதிர்த்து தன்னால் சண்டையிட முடியாது என்றும் நடுவரிடம் தெரிவித்தார். இதையடுத்து இமானே கேலிஃப் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன்பின்னர் ஏஞ்சலா கரினி உடைந்து அழுதது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.