சமீபத்தில் மாத்தறையில் கைப்பற்றப்பட்ட பெருமளவு போதைப்பொருள் கடல் வழியாக இலங்கைக்குள் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலதிக விபரங்களை வெளியிட்டுள்ளனர்.
பொலிஸாரின் கூற்றுப்படி, திங்கட்கிழமை மாத்தறை கந்தர பகுதியிலுள்ள நுன்னவெல பிரதேசத்தில் கடல் வழியாக போதைப்பொருள் கடத்தப்பட்டு, வான் ஒன்றில் கொண்டு செல்லப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது.
மாத்தறை பிரிவு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டதில், புதன்கிழமை மாத்தறையில் ஐந்து பேர் சந்தேக நபர்களாக கைது செய்யப்பட்டனர். இதன்போது போதைப்பொருள் வியாபாரத்திற்காக பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ரூ. 615,000 பறிமுதல் செய்யப்பட்டது.கைது செய்யப்பட்டவர்கள் 29, 42, 44, 46 மற்றும் 58 வயதுடையவர்களாவர்.
இவர்கள் கந்தர, தெவிநுவர மற்றும் பெலியத்த பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.சந்தேக நபர்களை மேலும் விசாரித்ததில், நேற்று கந்தர பகுதியில் ஒருவரும், மவுண்ட் லவீனியாவில் ஒருவரும், இரத்மலானையில் இருவரும் கைது செய்யப்பட்டனர்.இந்த சந்தேக நபர்களை விசாரித்ததில், காலி நாகொட பகுதியில் இருந்து மற்றொரு சந்தேக நபர் 160 கிலோ ஐஸ் மற்றும் 60 கிலோ ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர்கள் 26, 27, 29, 51 மற்றும் 58 வயதுடையவர்களாவர். இவர்கள் நாகொட, காலி, வெலிபென்ன, மஹரகம மற்றும் இரத்மலானை பகுதிகளைச் சேர்ந்தவர்கள். இக்குழுவினர் போதைப்பொருள் கடத்தல் மற்றும் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாத்தறை பிரிவு குற்றப்புலனாய்வுப் பிரிவினரும், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரும் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.