ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே உயிரிழப்புக்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் மற்றும் ஈரான் குற்றம் சுமத்தியுள்ள நிலையில், அந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக அமெரிக்கா பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்த தகவலின் படி, தெக்ரானில் உள்ள புரட்சிகர காவல்படையினர் ரகசிய கூட்டங்கள் நடத்தும் வளாகத்துக்குள் அமைந்துள்ள அந்த வீட்டில் 2 மாதத்துக்கு முன்பே வெடிகுண்டு மறைத்து வைக்கப்பட்டிருந்தது.
தெக்ரானில் தாக்குதல்
கத்தார் நாட்டில் நடந்த அரசியல் சந்திப்பை முடித்துக்கொண்டு, ஈரான் அதிபர் பதவியேற்பு விழாவுக்கு வருகை தந்த இஸ்மாயில் ஹனியே அந்த வீட்டில் இருப்பதை உறுதி செய்தபிறகு, மர்ம நபர்கள் அங்கு புதைத்து வைத்திருந்த வெடிகுண்டை ரிமோட் மூலம் இயக்கி வெடிக்கச்செய்துள்ளனர் என நியூ யார்க் டைம்ஸ் இதழ் தெரிவித்துள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை ஈரான் நாட்டின் புதிய அதிபராக மசூத் பெசேஷ்கியான் பதவி ஏற்றார். இந்த பதவியேற்பு விழாவில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கலந்து கொண்ட நிலையில் ஈரானின் உச்ச அதிகாரம் பெற்ற அயதுல்லா அலி கமேனியையும் சந்தித்து பேசினார்.
இந்த நிலையில்தான் இஸ்மாயில் ஹனியே ஈரானில் அவர் தங்கியிருந்த வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். அவருக்கு பாதுகாப்பளித்து வந்த ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை (IRGC) வெளியிட்ட அறிக்கையில், ஹமாஸ் அரசியல் அலுவலகத்தின் தலைவரான இஸ்மாயில் ஹனியே தெக்ரானில் உள்ள வீட்டில் தங்கியிருந்த போது வெடித்துச் சிதறியதில் அவரும் அவரது மெய்க்காப்பாளர்களில் ஒருவரும் மரணம் அடைந்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.
அதேவேளை, இஸ்ரேல்தான் இந்த படுகொலைக்குக் காரணம் என ஹமாஸ் மற்றும் ஈரான் நம்புகின்றன. ஆனால், இஸ்ரேல் இதுவரை இந்த தாக்குதலுக்குப் பொறுப்பேறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.