
யுத்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களைப் பற்றிய தகவல்களைத் திரட்டும் நோக்கில் விசாரணை நடவடிக்கைகள் மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் நேற்று (20) முன்னெடுக்கப்பட்டன.
காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த விசாரணைகளுக்கு மண்முனை தென் எருவில் பற்று, போரதீவுப்பற்று, மண்முனை தென் மேற்கு மற்றும் மண்முனைப் பற்று ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.
சுமார் 40 குடும்பங்களைச் சேர்ந்த உறவினர்கள் இதில் பங்கேற்று தங்களது தகவல்களையும் சாட்சியங்களையும் வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
நிகழ்வில் காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகத்தின் ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, குழுத் தலைவர் விமலநாதன், பிராந்திய இணைப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டு விசாரணைகளை முன்னெடுத்தனர்.
நேற்று காலை ஆரம்பமான இந்த நடவடிக்கைகள் மாலை 4 மணி வரை இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

