top of page
Group 39.png

வங்கதேசம் மாணவர் போராட்டம் வெடித்தது எப்படி? ஷேக் ஹசீனா அவசர அவசரமாக வெளியேறியது ஏன்?

Author Logo.png

AM Sajith

7/8/24

வங்கதேசத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த ஷேக் ஹசீனா, நாட்டை  விட்டு தப்பியோடும் நிலைக்கு தள்ளப்பட்டது எதனால். அவர் 4ஆவது முறை  பதவியேற்றதிலிருந்து நடந்தது என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.


எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு, தேர்தல் முறைகேடு என பல சர்ச்சைகளுக்கு  இடையே கடந்த ஜனவரி மாதம் 4-வது முறையாக வங்கதேசத்தின் பிரதமராக  பதவியேற்றார் ஷேக் ஹசீனா. 5 மாதங்கள் கடந்த பின்னர், குடிமைப் பணிகளில்,  சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு மீண்டும் 30 சதவிகித  இடஒதுக்கீடு வழங்க டாக்கா நீதிமன்றம் அனுமதி அளித்தது.


நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து 6 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த  மாணவர்கள் அமைதி போராட்டத்தை அறிவித்தனர். மாணவர் போராட்டத்திற்கு ஷேக்  ஹசீனா அனுமதி வழங்காத நிலையிலும், நாடு முழுவதும் போராட்டம்  வேகமெடுத்தது. போராட்டத்தை ஒடுக்க நினைத்த காவல்துறையினருக்கும்  மாணவர்களுக்கும் இடையே ஆங்காங்கே மோதல் ஏற்பட்டது.


தங்கள்  கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்காததால், மாணவர்கள் ரயில் மற்றும் சாலை  மறியலில் ஈடுப்பட்டனர். இதனால் டாக்கா உள்ளிட்ட முக்கிய நகரங்களில்  போக்குவரத்து முடங்கியது.  போராட்டக்காரர்களை அழைத்துப் பேசாமல், அவர்களை  பயங்கரவாதிகள் என அழைத்தார் ஷேக் ஹசீனா. மேலும் பயங்கரவாதிகள்  ஒடுக்கப்படுவார்கள் என எச்சரிக்கையும் விடுத்தார். நாடு முழுவதும்  வன்முறையும் கலவரமும் தீவிரமடைய, டாக்கா பல்கலைக்கழக வளாகத்திற்குள்  நுழைந்து தாக்குதல் நடத்தியது காவல்துறை.


இதில், போராட்டத்தை முன்னெடுத்த 6 மாணவர் தலைவர்கள் கொல்லப்பட்டனர். இதனால் ஏற்பட்ட பதற்றத்தை தொடர்ந்து
கல்வி  நிறுவனங்கள் காலவரம்பின்றி மூடப்பட்டன. கொல்லப்பட்ட மாணவர்கள் நினைவாக  அனைத்துப் பல்கலைகழக மாணவர்கள் நடத்திய பேரணியிலும் வன்முறை  வெடித்தது. இதனை தொடர்ந்து நாடு தழுவிய போராட்டத்திற்கு மாணவர் அமைப்பினர்  அழைப்பு விடுத்தனர்.


மாணவர்களை சமாதானப்படுத்தும் விதமாக நீதி விசாரணைக்கு உத்தரவிட்டார் ஷேக்  ஹசீனா. அமைதிக்கு திரும்பும் படி ஹசீனா விடுத்த அழைப்பை நிராகரித்த  மாணவர்கள், சர்வாதிகாரி ஒழிக என்ற முழக்கத்தை நாடு முழுவதும் பரப்பினர்.  எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் விதமாக காவல்துறையினரின் தாக்குதலில்  19 பேர் பலியாகினர். அதிகரிக்கும் வன்முறையை ஒடுக்கும் விதமாக நாடு  முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இணைய சேவைக்கு தடை  விதிக்கப்பட்டது. போராட்டக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு  பிறப்பிக்கப்பட்டது.


மாணவர் போராட்டங்களை வங்கதேச தேசிய கட்சி தூண்டுவதாக குற்றச்சாட்டிய  ஹசீனா, கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அவர்களுக்கு எச்சரிக்கை  விடுத்தார். பெரும் புரட்சியாக மாறிக்கொண்டிருந்த போராட்டத்தை சற்றேனும்  தளர்த்த நினைத்த ஹசீனா அரசு இடஒதுக்கீட்டை சீர்திருத்தி அரசாணை  வெளியிட்டார். ஆனால் இதையும் நிராகரித்து போராட்டத்தை தொடர்ந்தனர்  மாணவர்கள்.

இதனையடுத்து அதிரடியாக சோதனைகளை மேற்கொண்ட பாதுகாப்பு  துறை ஏராளமான மாணவ தலைவர்களை கைது செய்தது. பின்னர் பலதரப்பினரின்  கோரிக்கையை ஏற்று இணைய சேவைக்கு விதித்த தடையை நீக்கியது அரசு… எனினும்  வாட்ஸ் அப், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு தடை தொடரும் என  அறிவித்தது. மாணவர் போராட்டத்தை தொடங்கியதாக கூறி ஜமாத் ஷிபீர் என்ற மாணவ  அமைப்புக்கு, தீவரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தடைவிதித்தார் ஷேக் ஹசீனா.


ஊரடங்கு உத்தரவை ஒது பொருட்டாகவே மதிக்காத மாணவர்கள் தடையை மீறி போராட்டம்  நடத்தினர். அரசு உத்தரவை மீறியதால் இரண்டாயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.  இதற்கு இடையே கலவரத்திற்கு காரணமான டாக்கா உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச  நீதிமன்றம் தடை விதித்தது. எனினும் சுதந்திர போராட்ட வீரர்களின்  வாரிசுகளுக்கு அளிக்கப்படும் இடஒதுக்கீட்டை மொத்தமாக ரத்து செய்ய  வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.


தடையை தொடர்ந்து போராட்டம் வலுபெற்றது. போராட்டங்களில் பங்கேற்ற மாணவர்கள்  காவல்துறையினர் என 90 பேர் உயிரிழந்தனர். டாக்காவை நோக்கி மாணவர்கள்  பேரணியாக வரத் தொடங்கினர். போராட்டம் தீவிரமடைந்தால் ஷேக் ஹசீனா பிரதமர்  பதவியிலிருந்து ராஜினாமா செய்து விட்டு இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.

bottom of page