முகேஷ் அம்பானி ஆதரவு பெற்ற அட்வர்ப் டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனம் தனது முதல் மனித வடிவ ரோபோவை 2025ல் அறிமுகப்படுத்தவுள்ளதாக ப்ளூம்பெர்க் செய்தி தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு, எலோன் மஸ்கின் டெஸ்லா, பாஸ்டன் டைனமிக்ஸ், அகிலிட்டி ரோபோடிக்ஸ், ஃபிகர் ஏஐ மற்றும் சில சீன நிறுவனங்கள் போன்றவை நேரத்தை வீணாக்கும் அல்லது முக்கியமல்லாத பணிகளை செய்ய உதவும் ரோபோக்களை அறிமுகப்படுத்தும் சூழலில் வெளியாகியுள்ளது.இந்தியா மற்றும் ஆசியாவின் செல்வந்தரான முகேஷ் அம்பானி, அமெரிக்கா மற்றும் சீனாவிலிருந்து வரும் போட்டியாளர்களை எதிர்கொள்ள இந்த துறையில் நுழைந்துள்ளார்.
நொய்டாவில் அமைந்துள்ள அட்வர்ப் நிறுவனத்தின் மனித வடிவ ரோபோக்கள் ஃபேஷன், சில்லறை வணிகம் மற்றும் எரிசக்தி போன்ற தொழில்துறைகளுக்கு தேவையான பணிகளை செய்யக்கூடியவையாக இருக்கும் என அதன் தலைமை நிர்வாக அதிகாரி சங்கீத்குமார் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த ரோபோக்களின் விலை மற்றும் செயல்பாடுகள் குறித்த விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
அட்வர்ப் தவிர, அம்பானி இவ்வாண்டு பாரத்GPT நிறுவனம் தொடங்கிய ஹனூமான் ஏஐ என்ற ஸ்டார்ட்அப்பையும் ஆதரித்துள்ளார்.இதேவேளை, எலோன் மஸ்க் தனது "We, Robot" நிகழ்ச்சியில் புதிய Robotaxis மற்றும் Tesla Optimus ரோபோக்களை வெளியிட்டார். மஸ்க் கூறியதாவது, மனித வடிவ ரோபோக்கள் விரைவில் சந்தையில் கிடைக்கும். டெஸ்லாவின் Optimus ரோபோக்கள் சுமார் $20,000-$25,000 மதிப்பில் 2025ல் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சங்கீத்குமார் மேலும் கூறியதாவது, மனித வடிவ ரோபோக்களை உருவாக்க "மிகப் பெரிய முதலீடு" தேவைப்படும். இருப்பினும், அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் சீனாவில் உள்ள உலகளாவிய நிறுவனங்களுடன் போட்டியிட தயாராக உள்ளோம். குறிப்பாக சீனாவில் அரசாங்கத்தின் மானியங்கள் மூலம் உருவாக்கப்படும் ரோபோக்களையும் எதிர்கொள்ள முடியும் என அவர் தெரிவித்தார்.இந்த மனித வடிவ ரோபோக்கள் தொழில்துறைகளில் பல்வேறு பணிகளைச் செய்யக்கூடிய திறனை கொண்டிருக்கும். அவை பார்சல் கையாளுதல், தரம் பரிசோதனை, தொகுப்பு வேலைகள், அசம்பிளி மற்றும் பேரிடர் மீட்பு போன்ற பணிகளைச் செய்யும் திறனைப் பெறும்.
அதுமட்டுமல்லாமல், ஜியோ ஏஐ தளம் மற்றும் 5G சேவைகளை பயன்படுத்தி இந்த ரோபோக்களை உருவாக்க அட்வர்ப் நிறுவனம் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் நெருங்கிய ஒத்துழைப்பில் செயல்பட உள்ளது.இந்த முயற்சி "Make in India" மற்றும் "Atmanirbhar Bharat" ஆகிய இந்தியாவின் தேசிய திட்டங்களை முன்னேற்றுவதற்கான ஒரு முக்கியமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.