AI உலகத்திற்கு தயாராகி வருவதால், புதிய சுற்று பணி நீக்க அறிவிப்பை டெல் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த டெல் தொழில்நுட்ப நிறுவனம் அடுத்த சுற்று பணி நீக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டெல் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு (AI) தயாரிப்புகள் மற்றும் சேவைகளில் கவனம் செலுத்தி வருவதால் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. இது தொழில்நுட்ப துறையில் AI இன் வளர்ந்து வரும் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கிறது.
எத்தனை பணியார்களை பணியில் இருந்து நீக்கப்போகிறது என்ற சரியான எண்ணிக்கையை டெல் வெளியிடவில்லை என்றாலும், ஆயிரக்கணக்கானோர் வேலையை இழக்க நேரிடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி. கிட்டத்தட்ட 12,500 ஊழியர்கள் வேலையை இழக்க நேரிடலாம் என்று என்று பணிநீக்க கண்காணிப்பு இணையதளம் தெரிவித்துள்ளது.
டெல் நிர்வாகிகள் பில் ஸ்கேன்னெல் மற்றும் ஜான் பைர்ன் ஆகியோர் இந்த பணி நீக்கம் குறித்து ஏற்கனவே மறைமுகமாக அறிவித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஊழியர்களிடம் நிர்வாகிகள் பேசிய போது, நிறுவனத்தின் செயல்பாடுகளை நெறிப்படுத்துதல் மற்றும் AI திறன்களில் முதலீடுகளுக்கு முன்னுரிமை அளிப்பதன் அவசியம் குறித்து பேசியுள்ளனர். சந்தை கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில் மிகவும் திறமையாகவும் சுறுசுறுப்பாகவும் மாறுவதில் நிறுவனம் கவனம் செலுத்துவதாகவும் அவர்கள் கூறியிருந்தனர்.
மேலும் "இந்த மாற்றங்கள் மக்களையும் நமது ஊழியர்களையும் பாதிக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் இது வெற்றி மற்றும் பெரிய வெற்றியைப் பற்றியது” என்று நிர்வாகிகள் டெல் ஊழியர்களிடம் கூறியுள்ளனர்.
டெல் நிறுவனத்தின் மறுசீரமைப்பில், AI-உகந்த சேவையகங்கள் மற்றும் தரவு மைய தீர்வுகளில் நிறுவனத்தின் சலுகைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட புதிய AI-மையப்படுத்தப்பட்ட யூனிட் உருவாக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டில், டெல் நிறுவனம் 13,000 பேரை பணி நீக்கம் செய்தது. கடந்த ஆண்டில் டெல் நிறுவனம் மட்டுமின்றி பல முன்னணி நிறுவனங்களும் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணியில் இருந்து நீக்குவதாக அறிவித்தனர். 2023ல் கிட்டத்தட்ட 2,000 தொழில்நுட்ப நிறுவனங்கள் 260,000 தொழிலாளர்களுக்கு மேல் பணிநீக்கம் செய்துள்ள நிலையில், ஒட்டுமொத்த தொழில்நுட்பத் துறையும் பணிநீக்க அலைகளை எதிர்கொண்டுள்ளது. இந்த நிலையில் 2024ல் பல பெரிய நிறுவனங்களால் பணி நீக்க அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.